search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்ஐவி ரத்தம்"

    அறுவை சிகிச்சைக்கு வந்த மாணவிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியது தொடர்பாக வழக்கு தொடரப்போவதாக வக்கீல் அறிவித்துள்ளார். #HIVBlood

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த மாணவி ரத்தம் உறையாமை நோயால் அவதிப்பட்டார். அவருக்கு மூக்கில் இருந்து தொடர்ந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

    அதற்கு சிகிச்சை பெறுவதற்காக மதுரை புதூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது மாணவிக்கு மூக்கில் ஆபரேசன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

    அதைத்தொடர்ந்து ஆபரே‌ஷன் நடந்தது. ஆபரே‌ஷனுக்கு பின்னர் ரத்தம் செலுத்தப்பட்டது. ஒருசில நாட்களுக்கு பின்னர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனவே மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டதில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மாணவிக்கு ஆபரே‌ஷன் நடந்த ஆஸ்பத்திரியில் கேட்ட போது அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை.

    எனவே ஆஸ்பத்திரி மீது மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    தற்போது மாணவிக்கு ரத்தம் கொடுத்த ரத்த வங்கி செயல்பாட்டில் இல்லை. மாணவி தற்போது மதுரையில் உள்ள கல்லூரியில் நடனம் தொடர்பாக பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    உடல் நலக்குறைவு காரணமாக படிப்பை தொடர முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க வலியுறுத்தி வருகிற 2-ந் தேதி பொதுநல வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #HIVBlood

    சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரத்தில் ரத்தம் அளித்த இளைஞர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #HIVBlood #PregnantWoman
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 23 வயது மனைவி 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். அவருக்கு ரத்த அணுக்கள் குறைவாக இருப்பதாக கூறி சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் செலுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதுகுறித்து பரிசோதனை நடத்தியபோது கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்ட பிறகுதான் இந்த தொற்று பரவி இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்தியபோது சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்ட ரத்தம் அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரத்தம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபரிடம் தானமாக பெறப்பட்டது என தெரிய வந்தது.

    இதுகுறித்து சுகாதாரத் துறையினரும், அரசு சார்பில் நியமிக்கப்பட்ட மருத்துவ குழுவும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விவகாரத்தில் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர் வளர்மதி, ஆலோசகர்கள் கணேஷ்குமார், ரமேஷ் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

    ரத்ததானம் செய்த வாலிபர் 2016-ம் ஆண்டு முதல் ரத்ததானம் செய்து வந்த நிலையில் எச்.ஐ.வி. தொற்றுபற்றி அவருக்கு யாரும் தெரிவிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உறவினருக்கு ரத்தம் தேவைப்பட்டதால் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அவர் ரத்தம் கொடுத்துள்ளார்.

    அதன் பின்னர் வெளிநாடு செல்ல திட்டமிட்ட வாலிபர் அதற்காக மேலூரில் ரத்த பரிசோதனை செய்தபோது தான் அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது பற்றி தெரியவந்தது. உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனை சென்ற வாலிபர் தான் வழங்கிய ரத்தத்தை உறவினருக்கு செலுத்த வேண்டாம் என்று கூறினார். ஆனால் உறவினருக்கு அந்த ரத்தம் செலுத்தப்படவில்லை என கூறிய ரத்த வங்கி ஊழியர்கள் அதனை சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கி இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ரத்த தானம் வழங்கிய வாலிபர் கடந்த 26-ந்தேதி கமுதியில் மனவேதனையில் எலி மருந்து (வி‌ஷம்) குடித்து மயங்கினார். அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கும் மனஉளைச்சலில் இருந்த அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்தார். தனது உடலில் பொருத்தப்பட்டிருந்த மருத்துவ கருவிகளை பிடுங்கி எறிந்தார்.

    இதனை தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

    தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் இன்று அதிகாலை திடீரென ரத்த வாந்தி எடுத்தார். உடனடியாக அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை மேற் கொண்டனர். ஆனால் தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்த அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் சண்முகசுந்தரம் கூறுகையில், தற்கொலைக்கு முயன்ற வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் குற்ற உணர்வில் இருந்ததால் அதற்காக மனநல சிகிச்சையும் அளித்தோம். இந்தநிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு வாலிபர் திடீரென ரத்தவாந்தி எடுத்தார்.

    அவருக்கு டாக்டர்கள் உடனடி சிகிச்சை அளித்தனர். ஒரு யூனிட் ரத்தமும், 3 யூனிட் ரத்த பிளாஸ்மாவும் ஏற்றப்பட்டது. ஆனால் அவரது உடல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. காலை 8.10 மணிக்கு அவர் பரிதாபமாக இறந்தார்' என்றார்.

    வாலிபர் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடம் சோகத்தை ஏற்படுத்தியது. தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதை தானாக முன்வந்து தெரிவித்த நிலையிலும் பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டதால் அவர் மனவேதனையில் இருந்ததாகவும் அதுவே அவரை கொன்றுவிட்டதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர். #HIVBlood #PregnantWoman
    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்த மாங்காட்டைச் சேர்ந்த இளம்பெண் உறவினர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தனிமையில் தவிப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். #HIVBlood #PregnantWoman #Mangaduwoman
    சென்னை:

    சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் சென்னையிலும் கர்ப்பிணி ஒருவருக்கு எச்.ஐ.வி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

    மாங்காட்டைச் சேர்ந்த 27 வயது இளம்பெண்ணுக்கு கர்ப்பமாக இருந்தபோது ரத்த அளவு குறைவாக இருந்ததால் டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது.

    அதன் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த ஆகஸ்டு மாதம் ரத்தத்தை பரிசோதனை செய்தபோது அவரது ரத்தத்தில் எச்.ஐ.வி. கிருமி பாதித்து இருப்பது தெரிய வந்தது.


    அவரது கணவருக்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு எச்.ஐ.வி. நோய் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் வைத்து செலுத்தப்பட்ட ரத்தம் காரணமாகவே தனக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அந்த பெண் கூறினார்.

    இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், மருத்துவமனையில் கூறியபோது சரியான பதில் தெரிவிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 1½ வயது முடிவில்தான் எச்.ஐ.வி. கிருமி உள்ளதா? என்பது கூற முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி புகார்கள் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

    மாங்காடு இளம்பெண் புகாரை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை டீன் வசந்தாமணி மறுத்தார். அவர் கூறும்போது, “ஏப்ரல் மாதம் மாங்காட்டைச் சேர்ந்த இளம்பெண் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டார். 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது.

    ஆகஸ்டு மாதம் சிகிச்சைக்கு வந்தபோது அவருக்கு எச்.ஐ.வி. கிருமி இருப்பது தெரிய வந்தது. அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஏற்றப்பட்ட ரத்தம் நவீன முறையில் பரிசோதிக்கப்பட்டு அதில் எந்தஒரு தொற்றும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்புதான் ஏற்றப்பட்டது என்று கூறினார்.

    சில மாதங்களுக்கு முன்பே எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டு இருப்பது மாங்காடு பெண்ணுக்கு தெரிய வந்து விட்டது. ஆனால் அதை வெளியில் சொன்னால் தன்னையும், குழந்தையையும் புறக்கணித்து விடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார்.

    தற்போது சாத்தூர் கர்ப்பிணி சம்பவத்துக்கு பிறகு தனக்கும் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் தெரிவித்ததாக கூறி உள்ளார்.

    அவர் எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்ட தகவல் வெளியானதால் அவரை உறவினர்கள் புறக்கணித்து உள்ளனர். இதை மாங்காடு பெண் இன்று கண்ணீர் மல்க தெரிவித்தார். அவரை சந்திக்க யாரும் வராததால் வீட்டில் தனிமையில் தவித்து வருகிறார்.

    அக்கம் பக்கத்தினர் இளம்பெண்ணிடம் பேசுவது இல்லை. இதனால் அவர் மிகுந்த மனவேதனையில் உள்ளார்.

    இதற்கிடையே இளம் பெண்ணை அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சந்தித்தனர். அப்போது அவருக்கு நிர்வாகிகள் ஜெயந்தி, தனலட்சுமி உள்பட பலர் தங்களது ஆதரவை தெரிவித்தனர். மன ரீதியாக கவுன்சிலிங்கும் அளித்தனர்.

    பின்னர் மாதர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    “சாத்தூர் கர்ப்பிணிக்கு ஏற்பட்ட நிலைமை மாங்காட்டைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் ஏற்பட்டு இருக்கிறது. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த அவர் உறவினர்கள் புறக்கணிப்பால் தனிமையில் தவிக்கிறார். அவரை சந்தித்து அவருக்காக போராட நாங்கள் இருக்கிறோம்.

    எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ள இளம்பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். ரூ.1 கோடி நஷ்டஈடு, அரசு வேலை வழங்க வேண்டும். இளம்பெண்ணுக்கு ஆதரவாக வருகிற 2-ந்தேதி மாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையே மாங்காடு பெண் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் சார்பில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அந்த பெண் கர்ப்பம் தரித்தது முதல் குழந்தை பெற்றது வரை பெற்ற சிகிச்சைகளும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன.

    இந்த தகவல்களை கலெக்டரிடம் அறிக்கையாக கொடுக்க உள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் விரைவில் விளக்கம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #HIVBlood #PregnantWoman #Mangaduwoman
    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் 3 வகையான தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. #HIVBlood #PregnantWoman #chennaihighcourt
    சென்னை:

    எச்.ஐ.வி. பாதிப்பு ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 9 டாக்டர்கள் அடங்கிய குழுவால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த கர்ப்பிணி பெண் மனது அளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் மனநல சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.

    கர்ப்பிணி பெண்ணுக்கு தற்போது 8-வது மாதமாகும். ஜனவரி மாதம் 30-ந்தேதி அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் கணித்து உள்ளனர். எச்.ஐ.வி. பாதித்த கர்ப்பிணி பெண்களுக்கு தரமான சிகிச்சை கொடுத்தால் கருவில் வளரும் சிசுவுக்கு எச்.ஐ.வி. பரவுவதை 99 சதவீதம் தடுக்க முடியும்.

    இதை கருத்தில் கொண்டு அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு 3 வகையான தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்ணின் குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவ வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

    எச்.ஐ.வி. பாதித்த கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு தாயிடமிருந்து நேரிடையாக எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு ஏற்படாது. பிரவசம் நடக்கும் போது மட்டுமே குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவ வாய்ப்பு உள்ளது.

    எனவே சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவத்தின்போது மிக கவனமாக சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழு தீர்மானித்துள்ளது. மேலும் குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தைக்கு 42 நாட்கள் எச்.ஐ.வி. தடுப்பு மருந்துகள் கொடுக்கவும் டாக்டர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு தினமும் அடுத்தடுத்து பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. நேற்று நடந்த சோதனையின்போது அந்த பெண்ணுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பும் ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை டாக்டர்கள் இதை உறுதிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மஞ்சள் காமாலை பாதிப்பை குணப்படுத்தவும் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு தனி சிகிச்சை முறைகள் தொடங்கி உள்ளன. அந்த சிகிச்சைக்கு பிறகு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    எச்.ஐ.வி. பாதித்த கர்ப்பிணி பெண்ணை முழுமையாக குணப்படுத்த முடியா விட்டாலும் அவரை வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமாக வாழ வைக்க முடியும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். அதற்கேற்ப அந்த பெண்ணுக்கு சிகிச்சை முறைகள் நடந்து வருகின்றன.

    கர்ப்பிணி பெண்ணின் ரத்தத்தில் எச்.ஐ.வி. வைரஸ் எந்த அளவுக்கு பரவி இருக்கிறது என்ற ஆய்வும் நடந்து வருகிறது. அதுபற்றி தெரிய வந்ததும் அதற்கேற்ப சிகிச்சைகளை வழங்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டாக்டர்கள் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றியது தொடர்பாக மருத்துவத்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் மாலதி தலைமையிலான 5 பேர் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. போலீசாரும் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எத்தகைய நடவடிக்கைகள் என்பது பற்றி முடிவு செய்யப்படும். இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டிலும் இந்த விவகாரம் தொடர்பாக ஜனவரி 3-ந்தேதி மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.

    அப்போது தமிழக அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த அறிக்கை மூலம் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பான அனைத்து உண்மைகளும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #HIVBlood #PregnantWoman #chennaihighcourt
    சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது குறித்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. #HIVBlood #PregnantWoman #tngovt #chennaihighcourt

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் கிறிஸ்துமஸ் விடுமுறை கால நீதிமன்றம் இன்று செயல்படுகிறது. அவசர வழக்குகளை நீதிபதிகள் எஸ்.வைத்திய நாதன், பி.டி.ஆஷா ஆகியோர் விசாரிக்க தொடங்கினார்கள். அப்போது, வக்கீல்கள் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ், ஆர்.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் ஆஜராகி, அரசு டாக்டர்கள், ஊழியர்களின் அலட்சியமான பணியினால், இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அவசர வழக்கை விசாரிக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது நீதிபதிகள், ‘இருவரும் முறையிடுகிறீர்கள், யார் வழக்கு மனுவை தயாரித்து தயாராக உள்ளீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ், ‘இந்த விவகாரத்தை ஐகோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு வந்து விட்டோம். இது குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, விசாரிக்க வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட டாக்டர், செவிலியர் உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்யவேண்டும்’ என்று கூறினார்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்கிறோம். இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை வருகிற ஜனவரி 3-ந்தேதி தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    அப்போது கோர்ட்டில் இருந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், இந்த சம்பவம் குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்கிறோம்’ என்று கூறினார்.

    முன்னதாக மதுரையை சேர்ந்த வக்கீல் நீலமேகம் இன்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார், அதில், 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.

    இந்த தவறுக்கு காரணம் அரசு ரத்த வங்கிகளிலும், இதர ரத்த வங்கிகளிலும் தற்காலிக பணியாளர்கள் பணியில் இருப்பதே ஆகும். எனவே இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் நிர்மல்குமார், சரவணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    எனவே இதனை அவசர வழக்காக எடுத்து நடத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே மனுதாரர் வழக்கமான முறையில் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டனர். #HIVBlood #PregnantWoman #tngovt #chennaihighcourt

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண் சிகிச்சைக்கு 3 டாக்டர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. #HIV #HIVBlood #Pregnantwoman

    சென்னை:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி இந்த மாத தொடக்கத்தில் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று இருந்தார்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இந்த குறைபாட்டை நீக்குவதற்கு உடலில் ரத்தம் ஏற்ற வேண்டும் என்று கர்ப்பிணி பெண்ணிடம் தெரிவித்தனர். அந்த பெண்ணின் ரத்த வகை ‘ஓ பாசிடிவ்” ஆகும். சிவகாசி அரசு மருத்துவ மனையில் இருந்து அந்த ரத்தம் பெறப்பட்டது. கடந்த 3-ந்தேதி இந்த ரத்தத்தை அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றினார்கள்.

    மறுநாள் அந்த பெண்ணுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வாந்தி-வயிற்று போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. உடனடியாக அந்த பெண்ணை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.

    8 மாத கர்ப்பமாக இருந்ததால் அந்த பெண்ணுக்கு சாத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ரத்த பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு ரத்தத்தில் எச்.ஐ.வி. கலந்து இருப்பது தெரிய வந்தது.

    மேலும் அந்த பெண்ணின் ரத்தத்தில் மஞ்சள் காமாலை பாதிப்பும் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தம் செலுத்தப்பட்ட பிறகு தான் இந்த பிரச்சினை வந்து இருப்பது உறுதியானது.

    கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தம் கமுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரால் தானம் செய்யப்பட்டதாகும். அவர் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி இந்த ரத்தத்தை சிவகாசி அரசு மருத்துவமனையில் தானம் செய்து உள்ளார்.

    2016-ம் ஆண்டு முதல் இவர் ரத்த தானம் செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த நம்பிக்கையில் அவரது ரத்தத்தை சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் எடுத்து சேமித்து வைத்து உள்ளனர். அதை சிவகாசி ஆஸ்பத்திரிக்கு கொடுத்துள்ளனர். அந்த ரத்தத்தில் எச்.ஐ.வி.யுடன் மஞ்சள் காமாலை பாதிப்பும் இருந்தது.

     


    சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை டாக்டர்களும், ஊழியர்களும் அந்த ரத்தத்தை பரிசோதனை செய்து பார்க்கவில்லை. பரிசோதனை செய்யாமலேயே நம்பிக்கையின் அடிப்படையில் அந்த ரத்தத்தை கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தி விட்டனர்.

    இந்த தகவல்கள் அம்பலமானதும் எச்.ஐ.வி.யுடன் மஞ்சள் காமாலை கலந்த ரத்தத்தை பெற்ற கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டு உள்ளது. நேற்று காலை முதல் அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே கர்ப்பிணி பெண் நேற்று மதியம் புகார் அளிக்க குடும்பத்துடன் சாத்தூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அலட்சியமாக செயல்பட்ட அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தார்.

    இதைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் 3 பேரை டிஸ்மிஸ் செய்துள்ளது.

    டாக்டர்கள், ரத்த வங்கி ஊழியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் அப்பாவி ஏழை பெண்ணுக்கு எச்.ஐ.வி. கலந்த ரத்தம் செலுத்தப்பட்டது தமிழ்நாடு முழுவதும் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த பெண்ணை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட அரசு உயர் அதிகாரிகள் சந்தித்து பேசினார்கள்.

    அந்த பெண்ணுக்கு தேவையான சிகிச்சை அளிக்க உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நவீன சிகிச்சை கிடைக்கும் வகையில் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

    ஆஸ்பத்திரியின் முதல் மாடியில் உள்ள தனி வார்டில் அந்த பெண்ணுக்கு இன்று காலை முதல் நவீன சிகிச்சைகள் தொடங்கி உள்ளன. அவரது வயிற்றில் இருக்கும் குழந்தைககு எச்.ஐ.வி. தொற்று பரவாமல் தடுப்பதற்காக சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது.

    24 மணி நேரமும் அந்த கர்ப்பிணி பெண் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். டாக்டர்கள் சுழற்சி முறையில் அந்த பெண்ணை பரிசோதித்து வருகிறார்கள்.

    கர்ப்பிணி பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் கூறியதாவது:-

    சாத்தூர் அரசு மருத்துவ மனையில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் பாதிப்புக்கு உள்ளான கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனை முதல் மாடியில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மகப்பேறு மருத்துவத் துறை தலைவர் டாக்டர் சாந்தி மற்றும் டாக்டர்கள் நடராஜன், ரஞ்சித் ஆகியோர் தலைமையில் மருத்துவக்குழு நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கர்ப்பிணி பெண் மற்றும் அவரது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு எச்.ஐ.வி. நோய் தொற்று தாக்கம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சர்வதேச தரத்தில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும்.

    அந்த பெண்ணுக்கு ஏற்கனவே சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் சிகிச்சை தரப்பட்டது. இருந்த போதிலும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள கர்ப்பிணி பெண்ணுக்கு இன்று காலை எச்.ஐ.வி. தொற்று உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் செய்து அதன் அடிப்படையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சர்வதேச தரத்துடன கூடிய “எய்ட்ஸ் வைரஸ் லோடு” என்ற அதிநவீன சாதனம் பயன்பாட்டில் உள்ளது. அதன் வாயிலாக கர்ப்பிணி பெண்ணின் உடலில் நோய் தொற்றின் தாக்கத்தை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

    தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ள கர்ப்பிணி பெண் நலமாக உள்ளார். இருந்தபோதிலும் மஞ்சள்காமாலை நோய் தொற்றுக்கான கிருமி பாதிப்பு உள்ளது. அவற்றுக்கான சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #HIV #HIVBlood #Pregnantwoman

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #HIVBlood #PregnantWoman #vaiko #tngovt

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்யாமல் வைக்கப்பட்டிருந்த ரத்தம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டதால், அவர் எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். அரசு மருத்துவமனையின் அலட்சியப் போக்கால் இத்தகைய கொடூரம் நடந்தேறி இருக்கிறது.

    இது போன்று அவர்கள் உயிரோடு விளையாடும் சம்பவங்கள் மிகச் சாதாரணமாக நடப்பது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.

    பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் எச்.ஐ.வி. கிருமித் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடையவும், குழந்தைப் பேறு எவ்வித குறைபாடும் இன்றி நடந்தேறவும், தகுந்த உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, தமிழக அரசு அப்பெண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


    சாத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ள ரத்தம் ஹெச்.ஐ.வி. மற்றும் மஞ்சள் காமாலை தொற்றுநோய் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், 2016-ம் ஆண்டே ரத்த தானம் செய்தவருக்கு ஹெச்ஐவி பாதிக்கப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்கப்படாதது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது.

    தவறிழைத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1 கோடி ரூபாய் நஷ்டஈடும், உரிய உயர் மருத்துவ சிகிச்சையும் தமிழக அரசு வழங்க வேண்டும். மிக அடிப்படையான மருத்துவ சேவைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவ மனையில் கூலித் தொழிலாளி ஒருவரின் கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி.ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

    கர்ப்பிணிப் பெண்ணின் ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்துள்ளது. மருத்துவ சேவை துறையில் எடப்பாடி பழனிசாமி அரசு அலட்சியமாக நடந்து வருகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.

    சாத்தூர் சம்பவத்திற்குப் பிறகாவது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரத்த மாதிரிகளை முழுமையாகச் சோதிக்கும் வசதிகள் செய்யப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த அவல நிலைக்குக் காரணமான மருத்துவ அலுவலர்களுக்கு கடும் தண்டனை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட பெண்மணியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டுமென மனித நேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ‘சாத்தூரில், சுகாதாரத் துறையினரின் அலட்சியப் போக்கினாலும் நிர்வாகப் பிழையினாலும் எச்.ஐ.வி வைரஸ் ரத்தம் செலுத்தப்பட்டு பாதிப்படைந்துள்ள கர்ப்பிணிப் பெண்ணிற்கு நடந்த கொடுமை அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கின்றது.

    அப்பெண்ணிற்கு தற்காலிக நிவாரணங்களுடன், நீடித்த உதவியும், நிரந்தரப் பாதுகாப்பும் அவசியம்.

    ஏழைத்தாய்க்கு நடந்துள்ள இக்கொடூரம் குறித்து மக்களாகிய நாமும் அலட்சியப்போக்கினைக் காட்டாமல், நம் அனைவருக்குமான ஒரு அபாயக்குறியாக கருதி விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்,

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #HIVBlood #PregnantWoman #vaiko #tngovt

    எச்.ஐ.வி. ரத்தத்தை தானமாக வழங்கிய வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #HIVBlood #PregnantWoman

    ராமநாதபுரம்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் செலுத்தப்பட்ட ரத்தம், அவருக்கு எச்.ஐ.வி. தொற்றை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த ரத்தம் ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்டது என தெரியவந்தது.

    தானமாக பெறப்பட்ட ரத்தத்தை முறையாக பரிசோதிக்காத ரத்த வங்கி ஊழியர் வளர்மதி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் ரமேஷ், ஆலோசகர் கணேசன் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு வரப்பட்டு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் எச்.ஐ.வி. தொற்று ரத்தத்தை தானமாக வழங்கியவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் என தெரியவந்தது. அவர் சிவகாசி பட்டாசு ஆலையில் வேலை பார்த்த போது தனது உறவு பெண்ணுக்காக ரத்ததானம் வழங்கி உள்ளார்.

    ஆனால் அந்த ரத்தம் உறவுப்பெண்ணுக்கு வழங்கப்படாமல் சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் மதுரையில் ரத்த பரிசோதனை செய்த போது அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

    உடனடியாக சிவகாசி ரத்த வங்கியை தொடர்பு கொண்டு இதனை தெரிவித்ததோடு, தான் கொடுத்த ரத்தத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அதற்கு முன்பாகவே அந்த ரத்தம் கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டு விட்டது. இதனை மருத்துவர்கள் தெரிவித்தவுடன் வாலிபர் மனவேதனை அடைந்தார்.

    இந்த நிலையில் கர்ப்பிணி பெண் பாதிப்புக்குள்ளாகி விசாரணை பெரிதானது. வாலிபரிடம் மருத்துவர்கள், போலீசார் விசாரித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்து (வி‌ஷம்) குடித்து மயங்கினார்.

    அவரை பெற்றோர் மீட்டு கமுதி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி பெற்றதும் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதை அறிந்ததும் மனிதாபினமானத்தோடு, ரத்த வங்கிக்கு சென்று தானாக முன்வந்து அதனை தெரிவித்த எனது மகனை, தற்கொலை முடிவுக்கு மற்றவர்கள் தள்ளியிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என்று வாலிபரின் தந்தை தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வாலிபரை பலரும் சந்தித்து கேள்வி கேட்டுள்ளனர். இதனால் மீண்டும் மனவேதனைக்கு ஆளான அவர், நான் வாழ விரும்பவில்லை. சாகப் போகிறேன் எனக்கூறி கொண்டு தனது உடலில் பொருத்தப்பட்டு இருந்த மருத்துவ உபகரணங்களை பிடுங்கி எறிந்தார். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து டாக்டர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வாலிபரை பிடித்து வந்து மீண்டும் சிகிச்சையை தொடங்கினர்.

    மேலும் வாலிபர் மீண்டும் தற்கொலைக்கு முயலக்கூடும் என்பதால் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி அந்த வாலிபர் பாதுகாப்புடன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டதும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #HIVBlood #PregnantWoman 

    கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் ரத்த தானம் செய்த வாலிபர் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #HIVBlood #PregnantWoman
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபரின் உறவினர் பெண், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்காக அந்த வாலிபர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ரத்ததானம் வழங்கினார். ஆனால், அந்த ரத்தம் அவருடைய உறவினர் பெண்ணுக்கு ஏற்றப்படவில்லை. ரத்த வங்கியில் இருந்து கைமாறி சென்ற அந்த ரத்தம்தான் சாத்தூர் ஆஸ்பத்திரியில் 9 மாத கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது.

    இந்தநிலையில் வெளிநாடு செல்ல முயற்சி மேற்கொண்ட அந்த வாலிபர், அதற்காக மதுரையில் தனியார் நிறுவனம் மூலம் உடல்-ரத்த பரிசோதனை செய்துகொண்டார். அப்போது, அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் சிவகாசி ரத்த வங்கிக்கு சென்று தன்னிடம் எடுக்கப்பட்ட ரத்தத்தை வேறு யாருக்கும் செலுத்த வேண்டாம் என கூறினார். அதற்குள் அந்த ரத்தம் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட விவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ரத்தத்தை ஏற்றியதால் கர்ப்பிணி எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகி இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.


    இதுபற்றி அறிந்ததும் விரக்தி அடைந்த அந்த வாலிபர் நேற்று வீட்டில் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #HIVBlood #PregnantWoman 
    எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வழங்கப்படும் என்று எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் அறிவித்து உள்ளது. #HIVBlood #PregnantWoman #AIDSControlAssociation
    சென்னை:

    தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குனர் மற்றும் உறுப்பினர்-செயலர் டாக்டர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி சிவகாசி அரசு ரத்த வங்கியில் 21 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ரத்த தானம் செய்தார். அவரது ரத்தம் சிவகாசி அரசு ரத்த வங்கியில் அனைத்து சோதனைகளும் செய்யப்பட்ட பிறகே டிசம்பர் 3-ந்தேதி சாத்தூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது.

    அதன்பிறகு, அந்த பெண்ணிற்கு காய்ச்சல், தலைவலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறியதை தொடர்ந்து டிசம்பர் 17-ந்தேதி சாத்தூர் நம்பிக்கை மையத்தில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பெண்ணுக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது, ரத்த பரிமாற்றத்துக்கு பிறகு தான் நடந்ததா? என்பதை கண்டறிய விருதுநகர் மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் மனோகரன் பாதிக்கப்பட்ட பெண், சிவகாசி ரத்த வங்கி மருத்துவ அதிகாரி, ஆய்வக உதவியாளர், சிவகாசி ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்தல் மற்றும் நம்பிக்கை மையத்தின் ஆய்வக உதவியாளர், ஆலோசகர், விருதுநகர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி ஆகியோரிடம் கடந்த 24-ந்தேதி விசாரணை நடத்தினார்.

    இந்த நிகழ்வு குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ள மதுரை மாவட்ட ரத்த பரிமாற்று அதிகாரி மற்றும் ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனை முதுநிலை ரத்த வங்கி அதிகாரி டாக்டர் சிந்தா தலைமையில் தொழில்நுட்ப வல்லுனர் குழு சிவகாசிக்கு அனுப்பப்பட்டு தற்போது விரிவான ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    டிசம்பர் 18-ந்தேதி முதலே அந்த பெண்ணுக்கு எச்.ஐ.வி.- க்காக கூட்டு மருந்து சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எச்.ஐ.வி. கிருமி முழுமையாக தடுப்பு செய்யப்பட்டு குழந்தைக்கு எந்த பாதிப்பும் இன்றி பிரசவம் நடைபெற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.




    மேலும், குழந்தை பிரசவிக்கும் வரை பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்ந்து கண்காணிக்கவும், பிரசவத்தின் போது, குழந்தைக்கு நோய்த்தொற்று வராமல் இருக்க அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உடல்நலமான குழந்தையை பெற்றெடுப்பதை உறுதி செய்ய விருதுநகர் மாவட்ட இணை இயக்குனருக்கு (மருத்துவம்) அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விரிவான அறிக்கைக்கு பின் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு உள்ளிட்ட அவரது வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தவறு செய்த ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #HIVBlood #PregnantWoman #AIDSControlAssociation
    “எச்.ஐ.வி. தொற்று ஏற்படுத்தியதற்கு பதிலாக எனக்கு விஷ ஊசி போட்டு டாக்டர்கள் கொன்றிருக்கலாம்” எனக்கூறி பாதிக்கப்பட்ட கர்ப்பிணி கதறி அழுதார். #HIVBlood #PregnantWoman
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட 9 மாத கர்ப்பிணி நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. நான் பொதுவாக காய்ச்சல், தலைவலி என்றால் ஆஸ்பத்திரிக்கு செல்ல மாட்டேன். ஊசி போட்டுக்கொள்ள மாட்டேன். இந்த நிலையில் கர்ப்பிணியாக இருப்பதால் அரசு ஆஸ்பத்திரியை நம்பி சென்ற எனக்கு இந்த பாதிப்பை ஏற்படுத்திவிட்டார்கள்.

    ரத்தத்தை முறையாக பரிசோதிக்காமல் எனக்கு செலுத்தி எச்.ஐ.வி. தொற்று ஏற்படுத்தி விட்டார்கள். இதற்கு பதிலாக எனக்கு விஷ ஊசி போட்டு டாக்டர்கள் கொன்று இருக்கலாம். சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையின்போது வேறு ஊசி ஏதும் போடவில்லை. ரத்தம் மட்டுமே செலுத்தப்பட்டது.

    இந்த தவறு நடந்த பிறகு என்னை சந்தித்த மருத்துவ துறையினர் இதை பெரிதுபடுத்த வேண்டாம். உங்களுக்கு கூட்டு சிகிச்சை அளிக்கிறோம். அரசு வேலை, நிவாரணம் பெற்று தருகிறோம் எனக்கூறுகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. மருத்துவ துறையினரின் தவறான செயலால் இந்த சமுதாயம் ஒதுக்கும் நிலைக்கு என்னை தள்ளிவிட்டார்கள். எனக்கு மட்டுமின்றி என் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைக்கும்போது எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதில் தவறு செய்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை தேவை. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியபோது கதறி அழுதார். பின்னர் திடீரென மயங்கி விழுந்தார். சிறிது நேரம் கழித்து அவருக்கு மயக்கம் தெளிந்தது.

    இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் கூறும்போது, “எங்களுக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து அழுது, அழுது கண்ணீர் வற்றிவிட்டது. அரசு ஆஸ்பத்திரி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. என் மனைவிக்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்” என்றார். #HIVBlood #PregnantWoman
    பரிசோதிக்காமல் ரத்தம் செலுத்தியதால் எச்.ஐ.வி. கிருமி பாதித்த கர்ப்பிணியை சுகாதாரத்துறை செயலாளர் சந்தித்து பேசினார். அப்போது, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். #HIVBlood
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 24 வயதான மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

    உடல்நலக்குறைவின் காரணமாக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இவருக்கு, கடந்த 3-ந்தேதி ரத்தம் செலுத்தப்பட்டது. அந்த ரத்தம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டுவரப்பட்டது என்பதும், அதில் எச்.ஐ.வி. கிருமி கலந்து இருப்பதும் தெரியவந்து உள்ளது. இது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்க கோரியும், பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விருதுநகரில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஜனநாயக வாலிப சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் உறவினர்களும் அங்கு போராட்டம் நடத்தினார்கள்.

    பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட கர்ப்பிணி நேற்று விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்த காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அந்த கர்ப்பிணியும், அவருடைய கணவரும் கலெக்டர் அலுவலகம் வந்து மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமாரிடமும், சாத்தூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

    கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்திய தினத்தன்று சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர், செவிலியர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரியின் ரத்த வங்கி பணியாளர் ஆகிய 3 பேர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.




    தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று விருதுநகர் சென்று அங்குள்ள கலெக்டர் அலுவலத்தில் அந்த கர்ப்பிணியையும், அவரது கணவரையும் நேரில் சந்தித்து விசாரித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது அந்த பெண்ணிடம், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததுடன், அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.

    பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்றுடன் இருந்த ரத்தம் செலுத்தப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. மாநிலம் முழுவதும் 574 ரத்த இருப்பு மையங்களும், 284 ரத்த வங்கிகளும் உள்ளன. அங்கெல்லாம் இதுபோன்ற சம்பவம் நடந்ததே இல்லை. இது தவறுதலாக நடந்துவிட்டது.

    இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் வேதனை அடைந்த முதல்-அமைச்சர் என்னை அழைத்து, நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நவீன சிகிச்சை அளிக்க உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு உத்தரவிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தி தவறு செய்த ஊழியர்கள், அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்பேரில் நான் இங்கு வந்து, அந்த பெண்ணையும், அவரது கணவரையும் சந்தித்து ஆறுதல் கூறினேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தேன்.

    அந்த பெண்ணின் கணவர், ‘என் மனைவிக்கு ஏற்பட்டது போல வேறு யாருக்கும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். என் மனைவிக்கும், குழந்தைக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் நவீன சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து அவர்களின் உறவினர்கள், வக்கீலுடன் பேசி, உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் வைத்து சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறினேன். அங்கு அளிக்கப்படும் சிகிச்சை திருப்தி அளிக்கவில்லை என்றால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறி உள்ளேன். இதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    கர்ப்பிணிக்கு ஏற்பட்ட எச்.ஐ.வி. தொற்றுக்காக உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்து உள்ள 4 வகையான மாத்திரைகள் வழங்கவும், அவருக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி நிபுணர் களிடம் ஆலோசனை கேட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

    விருதுநகர் மாவட்டத்தில் 2 தனியார் ரத்த சேமிப்பு வங்கிகளும், 2 அரசு ரத்த சேமிப்பு வங்கிகளும், 7 ரத்த இருப்பு மையங்களும் உள்ளன. அங்கு சேமிக்கப்பட்டுள்ள அனைத்து வகை ரத்தத்தையும் உடனடியாக மறுபரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ நிபுணர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கிக்கு ரத்த தானம் செய்ய வந்த வாலிபரிடம், அவரது ரத்தத்தை பரிசோதனை செய்யாமல் ரத்ததானம் பெற்றுள்ளது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. விதிகளை பின்பற்றி, ரத்த மாதிரியை பரிசோதிக்காத பரிசோதனை கூடத்தின் தொழில்நுட்ப ஊழியர் வளர்மதி நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    இதேபோல கடந்த 2016-ம் ஆண்டு அந்த வாலிபர் ரத்தம்தானம் செய்தபோது, அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிந்தும், முறையாக பதிவு செய்யாமலும், வாலிபருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கவும் தவறிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்குழு ஊழியர்கள் ரமேஷ், ஆலோசகர் கணேசன் ஆகியோரும் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து மேலும் விசாரிக்க தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குனர் மற்றும் உறுப்பினர்-செயலாளர் டாக்டர் கி.செந்தில்ராஜ் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும். இதில் வேறு அலுவலர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ரத்த சேமிப்பு வங்கியில் இருந்து ரத்தம் கொடுக்கப்பட்ட உடன், அந்த ரத்த வகை நோயாளியின் ரத்தத்துடன் ஒத்துப்போகிறதா என்று மட்டும் பார்க்கப்படும். இனி அரசு ஆஸ்பத்திரிகளில், ரத்தம் செலுத்தும் முன் அந்த ரத்தத்தில் நோய் தொற்று இருக்கிறதா? என்பதை கண்டறியவும் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.

    தவறுக்கு காரணமான டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்ப்பிணியும், அவரது கணவரும் போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் கொடுத்து உள்ளனர். அதில், இந்த தவறுக்கு பொறுப்பானவர்கள் யார்? என்ற விவரம் இல்லை. இதனால் விசாரணை அறிக்கை வந்தபின், அதன் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    உயர்மட்ட குழு விசாரணையின் அடிப்படையில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே தமிழக மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள குறைபாடுகள், பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத்தரும் என்றும், பாதிக்கப்பட்ட நபருக்கு போதிய அளவு இழப்பீடு பெற்றுத்தரப்படும் என்றும் கூறினார்.

    அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் தவறு நடப்பது ஏன்? எந்தெந்த இடங்களில் தவறு நடைபெறுகிறது? என்பதை கண்காணித்து பொது சுகாதாரத்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்யவும், தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். #HIVBlood #PregnantWoman
    ×